தற்சார்பு தலித்துகளின் முன்னேற்றம்..|| அறிஞர் ரவிக்குமார். mp
தலித்துகளின் முன்னேற்றமும்
- ரவிக்குமார்.mp
தொழில் வளர்ச்சி ஏற்படாமல் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாது
என்பது யாவரும் அறிந்த உண்மை. ஆனால் அந்த வளர்ச்சியில் சாதாரண
மக்களுக்கும் பங்கிருக்க வேண்டும். அப்போதுதான் வளர்ச்சி என்பதற்கு
சரியான அர்த்தம் இருக்கும்.
இன்று சீனாவின் பொருளாதார நிலையோடு இந்தியாவை ஒப்பிட்டால் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருப்பதைப் பார்க்கலாம். அங்கும்
தொழில்மயத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.இந்தியாவிலும் அதே
கொள்கையைத்தான் பின்பற்றுகிறார்கள். ஆனால் அங்கு மக்களின்
வாழ்க்கைத்தரத்தில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் இந்தியாவில்
ஏற்படவில்லை. அதற்குக் காரணம் சீனாவின் தொழில்வளர்ச்சி எல்லா தரப்புத்
தொழிலாளர்களையும் உள்வாங்குவதாக இருக்கிறது. ஆனால் இந்தியத்
தொழிற்சாலைகளோ ஸ்கில்டு லேபர் எனப்படும் திறன் மிக்க தொழிலாளர்களை
மட்டும்தான் வேலைக்கு
எடுத்துக்கொள்கின்றன. தொழில் வளர்ச்சி காரணமாக உருவாகியிருக்கும்
நகரமயத்தினால் நகரங்களை நோக்கி ஈர்க்கப்படும் தொழிலாளர்கள் அங்கு
வேலைவாய்ப்புச் சந்தையில் தமது உழைப்பை விற்கமுடியாமல் தவிக்கின்றனர். இதன்காரணமாக நகரங்களில் வாழ்பவர்களைவிட அதிகமான எண்ணிக்கையில் நகரங்களைச் சுற்றியிருக்கும் நவீன சேரிகளில் வாழ்கிறவர்களின் எண்ணிக்கை அதிகமாக
இருக்கிறது. நகரத்துக்கும் கிராமத்துக்கும் இடையிலான இடைவெளி
அதிகரித்துக்கொண்டே போகிறது.
தலித் மக்கள் தான் இதில் மிக அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள்
இப்போதும் கிராமங்களில் நிலத்தையே நம்பிவாழும் கூலிகளாகவே பெரும்பாலும்
இருக்கின்றனர். இன்றைய வேலைவாய்ப்புச் சந்தையில் அவர்களது உழைப்பு விலைபோகக்கூடியதாக இல்லை.
இந்தியாவின் மக்கள் தொகையான 130 கோடியில் சுமார் அறுபது சதவீதம்பேர் 15
க்கும் 59க்கும் இடைப்பட்ட உழைக்கக்கூடிய வயதில் இருக்கிறார்கள். நமது நாட்டுக்குக் கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பாகவே இதைக் கருதவேண்டும்.
மனித வளம்போல மகத்தான வளம் ஏதுமில்லை என்பதை நாம் உணரவேண்டும்.
இவ்வளவு பெரிய மனித வளம் இருந்தாலும் ஒருபுறம் வேலை இல்லாத நிலை, இன்னொரு புறமோ தொழிற்சாலைகளுக்குப் பொருத்தமான தொழிலாளர்கள் கிடைக்காத நிலை. இதற்குக் காரணம் நமது நாட்டில் இருக்கும் மனிதவளம் திறனற்றதாக இருப்பதுதான். தலித்துகளின் நிலை இதில் பரிதாபமானது.
தலித்துகள் மற்ற சமூகத்தினரைப்போல கல்வி கற்றபோதிலும் அவர்களுக்கு
வழங்கப்படும் கல்வி பட்டங்களைத் தந்ததே தவிர திறன்களைத் தரவில்லை. பொறியியல் போன்ற தொழில்நுட்பக் கல்வியும்கூட அவர்களுக்கு வேலை கிடைக்க வழிவகுக்கவில்லை. முன்பெல்லாம் பிஏ., எம்.ஏ படித்துவிட்டு வேலையில்லாமல் இருப்பார்கள், இப்போது பி ஈ படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கிறார்கள், அதுதான் ஒரே வித்தியாசம்.
உழைக்கும் வயதில் இருக்கும் தலித்துகளுக்கு வேலை வாய்ப்புகளை
உருவாக்கித்தருவது மிகப்பெரிய சவாலாகும். அரசு பணிகள் மட்டுமே அவர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்திவிடாது. தற்போதிருக்கும் இட
ஒதுக்கீட்டை முழுமையாக அரசு நிறைவேற்றுவதாக வைத்துக் கொண்டால்கூட அது தலித் மக்களில் பத்து சதவீததினருக்குக்கூட பயன் அளிக்காது. தனியார் துறைக்கு இட ஒதுக்கீட்டை விரிவுபடுத்தினால் சற்றே
கூடுதலான வேலைவாய்ப்பை அவர்கள் பெறலாமே தவிர அப்போதும்கூட அவர்களது பிரச்சனை முழுதுமாகத் தீராது.
நாட்டிலுள்ள பொது வளங்களில் தமக்கான உரிமையைப் பெறுவதும், இன்றைய வேலை வாய்ப்புச் சந்தையில் இடம்பிடிக்கும் அளவுக்குத் திறன்களை
வளர்த்துக்கொள்வதும்தான் இதற்குத் தீர்வு. அதற்கு தலித்துகள்
அரசாங்கத்தையே சார்ந்திருக்கவேண்டும் என்று அவசியமில்லை. தமது திறன்களை
வளர்த்துக்கொள்வதற்கான முன்முயற்சிகளை அவர்களே எடுக்கமுடியும்.
திறன்களைக் கற்றுத் தர இப்போது ஐடிஐ போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களை
அரசும் தனியாரும் நடத்துகின்றனர். ஆனால் அங்குக் கற்பிக்கப்படும் திறன்
சர்வதேச தரமதிப்பீடின் அடிப்படையில் இல்லை. அதனால் அவர்கள்
வேலையற்றவர்களாக நீடிக்கவேண்டியுள்ளது. இதை மாற்றினாலொழிய வேலைவாய்ப்பைப்
பெற முடியாது. உலக வேலைவாய்ப்புச் சந்தையில் திறனுள்ள தொழிலாளர்களுக்கு மிகப்பெரிய தேவை உள்ளது. அந்தத் தேவையைக் கண்டறிந்து அதற்கேற்பத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை தலித் இளைஞர்களுக்கு வழங்கவேண்டும். அதற்கான நிறுவனங்களைத் துவக்குவதற்கு மிகப்பெரிய மூலதனம் தேவை இல்லை. படித்து வேலை வாய்ப்ப்பைப் பெற்றிருக்கும் தலித்துகள் கொஞ்சம் அக்கறை காட்டினால் இதை செய்துவிடலாம்.
ஏழ்மையிலிருந்து விடுபடாத நிலையிலும் கிராமப்புற தலித் மக்கள் கொஞ்சம்
நஞ்சமிருக்கும் தமது சேமிப்புகளை
திருவிழா போன்ற கேளிக்கைகளிலும், நுகர்பொருட்களை வாங்குவதிலுமே
செலவிடுகிறார்கள். திறன் மேம்பாட்டுக்காக அதில் சிறிதளவு செலவிட அவர்கள் முன்வந்தாலே போதும் நிலைமை எவ்வளவோ மாறிவிடும்..
மாநில அளவில் ஒரு சில இடங்களிலாவது திறன்மேம்பாட்டு நிறுவனங்களை ஆரம்பிப்பதற்கு படித்து வேலையில் இருக்கும் தலித்துகளும், தலித் அரசியல் இயக்கங்களும் முயற்சி எடுக்கவேண்டும்.
அமெரிக்காவில் இருக்கும் கறுப்பின மக்கள் அப்படித்தான் இன்று
முன்னேறியுள்ளனர். அந்த சமூகத்தில் முன்னேறிய பத்து விழுக்காட்டினர்
மீதமுள்ள தொன்ணூறு சதவீதத்தினரை முன்னேற்றுவதற்கு பங்களிப்புச்
செய்கின்றனர். ஆனால் இந்தியாவில் இட ஒதுக்கீட்டுக் கொள்கையால் பலனடைந்த
பிரிவினரோ அந்த சமூகத்தை மேம்படுத்துவதற்கு அக்கறையின்றி உள்ளனர்.
’சுயநலத்தோடு போட்டிபோடும்போது அறிவு தோற்றுப்போய்விடுகிறது’ என்று
சொன்னார் அம்பேதகர். அது தலித் படிப்பாளி வர்க்கத்துக்கும் பொருந்தும்.
(2014 ஆம் ஆண்டு மார்ச் 7 இல் எழுதியது)
கருத்துகள்
கருத்துரையிடுக